சேலம்: சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏற்காட்டை சேர்ந்த முரளிந்திரன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்லும் வகுப்பிற்கு பாடம் நடத்த, தற்காலிகமாக ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேசமயம், ஆசிரியர் முரளிந்திரன் பள்ளிக்கு வந்து கையெழுத்திட்டு விட்டு வெளியே சென்றுவிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிஇஓ முருகன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, ஆசிரியர் பள்ளியில் இல்லாததும், வேறு ஆசிரியர் பாடம் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் முரளிந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த தகவல் அறிந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், நேற்று மதியம் ஏற்காடு மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. பள்ளியின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை ஆசிரியர் செய்துள்ளார். எனவே, அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றனர். தகவலறிந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார், அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.