கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சூடுபிடிக்கிறது; கொடநாட்டில் அழிக்கப்பட்ட செல்போன் டவர் பதிவுகளை மீட்கும் முயற்சியில் சிபிசிஐடி தீவிரம்: 90 நாட்களில் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை, வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சைபர் கிரைமில் அனுபவம் உள்ள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று அழிக்கப்பட்ட செல்ேபான் டவர் பதிவுகளை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. ஓய்வு எடுப்பதற்காக அங்கு அவ்வப்போது செல்வார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு அவரது கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

அங்கிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த கும்பல், உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த நேரத்தில் அக்கட்சியின் தலைவியான ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. அதிமுக ஆட்சியின்போது தவறு செய்யும் அமைச்சர்களை வரவழைக்கும் ஜெயலலிதா, அவர்களை காலில் விழ வைத்து புகைப்படம் எடுத்துக்ெகாள்வார். அவருக்கு தெரியாமல் சொத்து சேர்த்தவர்களின் சொத்துபத்திரங்களை பறித்து வைத்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. அவை எல்லாமே கொடநாடு பங்களாவில் இருக்கும். அதே நேரத்தில் தங்கம் வெள்ளி, வைடூரியங்களும் வைத்திருந்ததாகவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவ்வப்போது தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா இறந்த நிலையில், அவரது தோழியான சசிகலா 4 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து திரும்பி வந்தால் மீண்டும் அவருக்கு சேவகம் செய்ய வேண்டும், சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் அங்குள்ள ஆவணங்களை கொள்ளையடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சில முக்கிய புள்ளிகள் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவராக இருந்த சேலத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனான சயான் உள்ளிட்டோர் இந்த கொலை, ெகாள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் பிடியில் சிக்குவதற்குள் மர்மமான முறையில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். கூலிப்படை ஆசாமியான சயான் மனைவி குழந்தைகளுடன் காரில் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கினார்.

மனைவி , குழந்தை உயிரிழந்த நிலையில் காயத்துடன் சயான் தப்பினார். தன்னை திட்டமிட்டு கொலை செய்ய முடிவு செய்த நிலையில் தான், இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இவ்வழக்கில் பல்வேறு மர்மமுடிச்சுக்கள் புதைந்து கிடப்பதால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்காக 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கு புலன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்தும் முக்கியமான சைபர் கிரைம் அதிகாரிகளும் கொடநாட்டில் முகாமிட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால், செல்போன் பேச்சு போன்ற விவரங்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழித்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக ‘சிங்கம்’ திரைப்படத்தில் டிஜிபியை தந்திரமாக வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல், அவர்களின் செல்போன் பதிவின் வழித்தடத்தை அழித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதேபோலவே இந்த வழக்கிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழிக்கப்பட்ட செல்போன் பதிவுகளை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனதால், பல ஆயிரக்கணக்கான செல்போன் டவர்கள் பதிவுகள் வருகிறது. ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, முக்கியமான சில செல்போன் டவர் பதிவுகள் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது.

அதிலும் போலீஸ் அதிகாரிகளின் டவர்கள் சிக்கியிருப்பதால் வழக்கு தீவிரமடைந்துள்ளது. இதனால் சைபர் கிரைமில் கைதேர்ந்த அதிநுட்பம் கொண்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிலஅதிகாரிகள் ரகசியமாக சேலத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சேலத்தை சேர்ந்த அதிமுக மாஜிக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்னும் 90 நாட்களில் புலன் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவோம்’என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.