சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை, வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் அழிக்கப்பட்ட செல்போன் டவர் பதிவுகளை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. ஓய்வு எடுப்பதற்காக அங்கு அவ்வப்போது செல்வார். கடந்த 2016ம் ஆண்டு, ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
அங்கிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த கும்பல், உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதனிடையே, ஜெயலலிதா இறந்த நிலையில், அவரது தோழியான சசிகலா 4ஆண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில் இருந்து திரும்பி வெளியே வருவதற்குள், அங்குள்ள ஆவணங்களை கொள்ளையடித்து விட வேண்டும் என்ற நோக்கில், சில முக்கிய புள்ளிகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவராக இருந்த சேலத்தை சேர்ந்த கனகராஜ் தலைமையில், கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனான சயான் உள்ளிட்டோர் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடநாடு கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை சயான் வெளியிட்டார்.
சேலத்தில் இருந்தும் முக்கியமான சைபர் கிரைம் அதிகாரிகள் கொடநாட்டில் முகாமிட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால், செல்போன் பேச்சு போன்ற விவரங்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழித்திருப்பது தெரியவந்துள்ளது. அழிக்கப்பட்ட செல்போன் பதிவுகளை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் இறங்கியுள்ளனர். முக்கியமான சில செல்போன் டவர் பதிவுகள் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது. இதுகுறித்து உயர்போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்னும் 90 நாட்களில் புலன் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம்,’’ என்றனர்.