கோவை செல்ல கட்டுப்பாடுகள்… விமான நிலையத்தில் இன்று முதல் கெடுபிடி!

சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் உருமாறிய
கொரோனா வைரஸ்
பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் மாநில அரசுகளுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கண்காணிப்பு

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளை கண்காணிக்கும் பணியை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பயணிகளும் உரிய முறையில் கண்காணிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதில் இருந்தே போதிய இடைவெளி விட்டு அழைத்து வரப்படுவர்.

உரிய மருத்துவ நடைமுறைகள்

தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை பதிவு செய்யப்படும். அதில் அறிகுறிகள் தென்பட்டால் உரிய மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்படும். இதற்காக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 24 மணி நேரமும் கோவை விமான நிலையம் எச்சரிக்கை உடன் இருக்கிறது.

என்னென்ன கட்டுப்பாடுகள்?

முகக்கவசம் அணிவது, போதிய இடைவெளியை பின்பற்றுவது, ஏற்கனவே பின்பற்றப்பட்ட கொரோனா நடைமுறைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு விமானங்கள் 22 ஆகும்.

இரண்டு சர்வதேச விமானங்கள்

சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் வருகின்றன. இரண்டையும் சேர்த்து தோராயமாக 400 பயணிகள் வருவர். பயணிகள் யாருக்காவது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உரிய கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும். அதன்பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரேண்டமாக பரிசோதனை

தற்போதைய சூழலில் 2 சதவீத பயணிகளிடம் ரேண்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இது ஒரே நாட்டில் இருந்து வருவோரிடம் அல்லாமல், வெவ்வேறு நாடுகளில் இருந்து வருவோர் என மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தும் அறைகள் தயாராக உள்ளன.

தயார் நிலையில் ஐசோலேஷன் ரூம்

இதேபோல் RT-PCR பரிசோதனை அறைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் அடிப்படையில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் RT-PCR பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.