திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 12.30க்கும், 1 மணிக்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம்.
வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. 26ம் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து தங்க அங்கி ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் (27ம் தேதி) மதியம் மண்டல பூஜை நடக்கும். அதுவரை தங்க அங்கி அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும். மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் மீண்டும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குத் நடை திறக்கப்படும்.