காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 அதிகாரிகள் உட்பட 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம், சீனா மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. அந்த மாநிலத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. 2017 ஜூன் மாதம் வடக்கு சிக்கிமின் லோக்லாம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர்.
மேலும், வடக்கு சிக்கிமின் லாசென், லாசங், டாங்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் சீனாவின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. இதனால், வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதி முழுவதும் கூடுதல் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
3 வேன்களில் பயணம்: சிக்கிம் எல்லையோர மலைப் பகுதியில் கடும் குளிரில் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதால், அவர்கள் சுழற்சி அடிப்படையில் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிக்கிமின் சட்டன் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து, எல்லைப் பகுதியான டாங்குவுக்கு நேற்று 3 வேன்களில் ராணுவ வீரர்கள் புறப்பட்டனர். இவற்றில் தலா 20 வீரர்கள் பயணம் செய்தனர்.
குறுகலான ஊசிமுனை வளைவுகள் கொண்ட மலைப் பகுதியில் 3 வேன்களும் அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்தன. வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதி வளைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு வேன் நிலைதடுமாறி செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதர 2 வேன்களில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீஸார், தீயணைப்பு வீரர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு விரைந்து சென்று, மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர்.
இந்த விபத்தில் ராணுவ வாகனம் உருக்குலைந்தது. அதில் பயணம் செய்த 3 அதிகாரிகள் உட்பட16 வீரர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சிக்கிம் போலீஸார் கூறியதாவது: வடக்கு சிக்கிமின் மலைப் பகுதிச் சாலைகள் மிகவும் குறுகலானவை. ஊசிமுனை வளைவுகளில் வாகனத்தை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். சிறிய தவறு நேரிட்டால்கூட, செங்குத்தான பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்துவிடும். மூன்று ராணுவ வேன்கள் அடுத்தடுத்து சென்ற நிலையில், ஒரு வேன் மட்டும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்திருக்கிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். காயமடைந்த வீரர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அவர்கள் குணமடைந்த பின்னர், முழுமையான விவரங்கள் கேட்டறியப்படும்.
காலை நேரத்தில் மலைப் பகுதியை வாகனம் கடந்து சென்றிருக்கிறது. எனவே, பனிமூட்டம் காரணமாக சாலையில் இருந்து வாகனம் விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும்விசாரிக்கப்படுகிறது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் காங்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு உடல்கள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “சிக்கிமில் நேரிட்ட சாலை விபத்தில் இந்திய ராணுவத்தின் தீரமிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “சிக்கிமில் நேரிட்டசாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனைஅளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், “உயிரிழந்த வீரர்களின் சேவைக்கு ஒட்டுமொத்த நாடும் மரியாதை செலுத்துகிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.