சுசீந்திரம்: சுசீந்திரத்தில் இன்று காலை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிஷேக பொருட்கள் அடங்கிய ஷோடச அபிஷேகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று காலை துவங்கி தொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது.
முதல்நாளான நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் 11.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது. விழாவின் 2வது நாளான இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலில் காலை 5 மணிக்கு ராமர், சீதைக்கு சிறப்பு அஷ்டாபிஷேம் நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு ஆஞ்சயநேயர் சுவாமிக்கு அபிஷேம் தொடங்கியது. அதன்படி 1500 லிட்டர் பால், மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவிய பொடி (களபம்), அரிசி மாவு பொடி, பன்னீர், தயிர், கருப்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, குங்குமம், சந்தனம், தேன், பஞ்சாமிருதம் என 16 வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு ஷோடச அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேக நிகழ்ச்சியை திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தொடங்கி வைத்தார். பின்னர் பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ராமர், சீதைக்கு புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு பஜனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமியின் கழுத்து பாகம் வரை பூக்களை கொண்டு புஷ்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் வாடமல்லி போன்ற மணமில்லாத மலர்கள் தவிர்க்கப்படும். இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். முன்னதாக காலை 10 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் வைத்து பக்தர்களுக்கு புளியோதரை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்கள் ஆஸ்ரமம் 4 வழி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் கன்னியாகுமரி, நாகர்கோவில் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
லட்டு, தட்டுவடை பிரசாதம்
கோயிலில் பக்தர்களுக்கு காலை 9 மணி முதல் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்படி ஒரு மஞ்சள் பையில் லட்டு, தட்டுவடை, முறுக்கு, திருநீறு குங்குமம், சந்தனம் மற்றும் ஆஞ்சநேயர் முழு உருவப்படம் ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வாங்கி சென்றனர்.