ட்ராப் ஆகிவிட்டதா வாடிவாசல்?.. – விளக்கமளித்த தயாரிப்பாளர் தாணு

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். வெற்றியின் படங்கள் அனைத்தும் வாழ்வியலையும், அரசியலையும் தீர்க்கமாக பேசக்கூடியவை. அதனால்தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் பலரும் வெற்றிமாறனை பல மேடைகளில் புகழ்ந்துள்ளனர். முக்கியமாக கற்பனையாக மட்டும் கதையை யோசிக்கலாம் என்ற நிலையிலிருந்து நாவல்களை அடிப்படையாக வைத்தும் சினிமா எடுக்கலாம் என்ற விதையை ஆழமாக விதைத்தவர் வெற்றிமாறன். அவர் இயக்கிய அசுரன் அந்த வகையை சேர்ந்தது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அசுரன் பஞ்சமி நிலம் குறித்த விவாதத்தை எழுப்பியது. அவர் தற்போது ஜெயமோகனின் கதையை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் சூரியும், விஜய் சேதுபதியும் நடித்துவருகின்றனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.

இதனையடுத்து அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படமும் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது.

இதற்கிடையே சூர்யா பாலாவின் வணங்கான் படத்திலும், சிவா இயக்கும் படத்திலும் கமிட்டானார். வெற்றிமாறனோ விடுதலை படத்தில் பிஸியானார். இதனால் வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப்போனது. சூழல் இப்படி இருக்க வணங்கான் படத்திலிருந்து வெளியேறினார். ஆனால் வாடிவாசலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யா, சிவா படத்தில் பிஸியானார்.

எனவே வாடிவாசல் படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டார் என தகவல்கள் வேகமாக பரவின. இதனால் வெற்றிமாறன் – சூர்யா காம்போ அவ்வளவுதான் என பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில் வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அளித்த ஒரு பேட்டியில், “இது ஆதாரமற்ற வதந்திகள். மக்கள் தங்கள் பத்து நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என கூறியிருக்கிறார். இதன் மூலம் வாடிவாசல் படம் ட்ராப் ஆகவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.