திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மாணவியின் கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து சூடு வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த கிடாதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் முனியன். இவரது 9 வயது மகள் மங்கலம் அருகே மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, இச்சிறுமி சரியாக படிக்கவில்லை என கூறி அவரின் கன்னத்தில் தீக்குச்சியை பற்ற வைத்து தலைமை ஆசிரியை உஷா ராணி ‘சூடு’ வைத்துள்ளார்.
இதனால், சிறுமியின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட தலைமை ஆசிரியை உஷா ராணியிடம் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், மாணவியின் தாயார் மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்திவந்தனர். விசாரணையின் முடிவில், தலைமை ஆசிரியை உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் (தொடக்கப்பள்ளி) உத்தரவிட்டார்.