2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.
ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி பிரித் ஓதுதல் நிகழ்வுக்கான செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை தூதரகம் மறுக்கின்றது.
இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும், தூதரக வளாகத்தில் ‘பிரித் மண்டபத்தை’ நிறுவுவதற்கு மட்டுமே தூதரகத்தின் உதவியை குழு நாடியது என்றும் தூதரகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த நிகழ்வுக்கு இலங்கை அரசாங்கம், தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவை எந்த வித நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.
சிக்கித் தவிக்கும் வீட்டுப் பணிப் பெண்கள் 283 பேரை திருப்பி அனுப்புவதற்கு ஓமான் அதிகாரிகளுடன் தூதரகம் இந்த வருடத்தில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடாத்தியதுடன், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 58 மற்றும் 22 புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் நாட்டிற்கு மீள திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலங்கையர்களின் நலனை உறுதி செய்வதில் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான சிறந்த நெருங்கிய மற்றும் சுமுகமான இருதரப்பு உறவுகளைக் கருத்தில் கொண்டு, ஓமானில் தொழில் வாய்ப்புக்களைத் தேடும் இலங்கையர்கள் முறையான வழிகள் மூலம் மட்டுமே தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊக்குவிக்கின்றது.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட், ஓமான்
2022 டிசம்பர் 22