சென்னை: தேசிய விவசாயிகள் தினம் (டிச.23) நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் நாள் வாழ்த்துகள். குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது. சீரிய நீர்ப்பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் பல உச்சங்களை அடைவோம்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: உலகுக்கே உணவளிக்கும், உன்னத சேவையாற்றும் பெரும் போற்றுதலுக்குரிய விவசாய பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை ஒரு விவசாயியாக பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும்விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றி காக்க உறுதி யேற்போம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தேசிய விவசாயிகள் தினத்துக்கு, விவசாய பெருங்குடி மக்களின் தோளோடு தோள் நின்று, நாம் உட்கொள்ளும் உணவுக்காக வியர்வை சிந்திய விவசாயிக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அளப் பரிய சேவையை போற்றி வணங்குவோம்.
பாமக தலைவர் அன்புமணி: விவசாயிகள்தான் நான் வணங்கும் கடவுள். தேசிய விவசாயிகள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். விவசாயிகள் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். அதற்காக பாமக போராடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.