தாமிரபரணி ஆற்றில் பாசன வசதி பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக நீண்ட காலத்துக்கு முன்பே பாளையங்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகச் செல்லும் தண்ணீர் குளங்களுக்குச் செல்வதுடன் வயல்களின் பாசனத்துக்குப் பயன்படுகிறது. இந்த நிலையில், இந்தக் கால்வாய் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்று நீர் செல்லும் பாளையங்கால்வாயின் அருகே மேலச்செவல் மாணிக்கநகர் பகுதி உள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலிருந்து மயானத்துக்குச் செல்லும் சாலையானது கால்வாய் வழியாகவே செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் அதிகமாக தண்ணீர் செல்லும் என்பதால் அதன் வழியாகச் செல்வதற்கு ஏதுவாக கடந்த 2007-ம் ஆண்டு பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பாளையங்கால்வாயில் தண்ணீர் அதிகமாக வந்தது. அப்போது கால்வாயின் மீதிருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் பாலத்தைச் சரிசெய்து கொடுக்குமாறு கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால், கால்வாயில் செல்லும் தண்ணீருக்குள் இறங்கியே மயானத்துக்குச் செல்லும் அவலத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், மாணிக்கநகர் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் என்ற 92 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.
பாளையங்கால்வாயில் தற்போது விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் கால்வாயை நிரப்பியபடி தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில், முதியவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல கால்வாயைக் கடக்க வேண்டும் என்பதால் கரையின் இரு பகுதிக்கும் கயிறு கட்டப்பட்டது. அதைப் பிடித்தபடியே, முதியவரின் உடலைச் சுமந்தபடி கால்வாய் தண்ணீருக்குள் இறங்கி நடந்தார்கள்.
கழுத்தளவுக்குச் செல்லும் தண்ணீரில் வேகம் அதிகம் இருப்பதால் கயிற்றைப் பிடித்தபடி சென்றனர். கயிற்றை விட்டுவிட்டால் கடப்பவர் தண்ணீரில் மூழ்கி விடுவார் என்பதுடன் சுமந்து செல்லும் பிணமும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் ஆபத்து இருந்தது. இத்தகைய அவலமான சூழலில், கிராம மக்கள் முதியவரின் உடலைச் சுமந்து செல்லும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அத்துடன், மயானம் செல்வதற்காக பாளையங்கால்வாயை கடக்கும் பாலத்தை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.