நம் நாட்டைப் பொறுத்த வரையில் ஏழைகள் ஏழைகளாகவே, நடுத்தர வருமானப் பிரிவினர் நடுத்தர மக்களாகவே இருக்கிறார்கள். ஆனால், பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்களாக மாறி வருகிறார்கள்.
இது யார் தவறு? பணக்காரர்களின் தவறா? இல்லை. உண்மையில் இது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் தவறாகும். பணக்காரர்கள் பின்பற்றும் கீழ்க்காணும் ஆறு அம்சங்களை கடைபிடித்தால் யாரும் பணக்காரர் ஆக முடியும்.
1. பல வகை வருமானம்..!
ஏழைகள் ஏழைகளாக இருக்க முக்கியக் காரணம், அவர்கள் ஒரே ஒரு வருமானத்தை மட்டுமே நம்பி இருப்பதாகும். உதாரணத்துக்கு, ஏழைகள் அல்லது நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அந்த வேலையை மட்டுமே கடமையாக செய்து வருவார்கள். ஓய்வு நேரம் மற்றும் வார விடுமுறை தினங்களில் அதிகம் செலவு செய்து பொழுதை போக்கிக் கொண்டிருப்பார்கள்.
அதேநேரத்தில், பணக்கார்ர்கள் ஒன்றுக்கு மூன்றாக பல வருமானங்களை கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிரதான தொழில் மூலம் வருமானம் வரும் அதேநேரத்தில் ரியல் எஸ்டேட் கட்டடங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் வருமானம் வந்துக் கொண்டிருக்கும். அவர்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதோடு, அதன் மூலமும் வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவார்கள்.
2. கடன்களில் சிக்க மாட்டார்கள்..!
ஏழைகளும் நடுத்தர மக்களும் எப்போதும் கடன் சிக்கலில் இருப்பார்கள். அவர்கள் எதை வாங்கினாலும் அதனை அவசரத்துக்கு அடமானம் வைக்க முடியுமா என்பதை பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு தங்க நகைகள், வீடுகளை நடுத்தர மக்கள் வாங்கும் போது இந்த மனநிலை ஓங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும்தான் அதிக தங்க நகைகள் இருக்கின்றன. பணக்காரர்களிடம் தங்க நாணயமும் தங்கக் கட்டிகளும் அதிகம் இருக்கின்றன.
3. முதலீட்டில் ரிஸ்க் எடுப்பார்கள்..!
நடுத்தர குடும்பத்தினர் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க மிகவும் தயங்குவார்கள். அவர்கள் பெரும்பாலும் ஃபிக்ஸட் டெபாசிட், தங்க நகை ஆகியவற்றில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்க விகித அளவுக்குதான் இருக்கும்.
இதுவே பணக்காரர்கள் என்கிற போது ரிஸ்க் கொண்ட அதே நேரத்தில் அதிக வருமானம் தரும் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
4. நீண்ட கால முதலீடு..!
நடுத்தர வருவாய் பிரிவினர் எப்போதும் முதலீடு செய்ததும் அடுத்த மாதமே வருமானம் வர வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால்தான். பொன்ஸி போன்ற மாதம் தோறும் வருமானம் தருவதாக சொல்லும் மோசடி திட்டங்களில் பணத்தை போட்டு மாட்டிக் கொள்கிறார்கள்.
பணக்காரர்கள் அப்படி அல்ல; பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்துவிட்டு குறைந்தது 3 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அவற்றிலிருந்து வருமானம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களின் முதலீடு எப்போதும் நீண்ட காலத்துக்கானதாக இருக்கும். குறுகிய காலத் தேவைக்கான பணத்தை மட்டும் வங்கியில் போட்டு வைத்திருப்பார்கள்.
5. பணம் சம்பாதிக்க கடனைப் பயன்படுத்துவது..!
பணக்காரர்களை பொறுத்த வரையில் பணம் சம்பாதிக்கத்தான் கடனை பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு அவர்கள் தொழில் தொடங்க, தொழிலை விரிவாக்கம் செய்ய கடன் வாங்குவார்கள். அதன் மூலம் அதிக பணம் சம்பாதித்து கடனை சுலபமாக அடைத்துவிடுவார்கள். அவர்கள் தேய்மானம் கொண்ட கார், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்டவைகளை கடனில் வாங்க மாட்டார்கள்.
ஆனால், நடுத்தர மக்கள் வாங்கும் கடன் அவர்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்காது. அவர்களுக்கு அதிக செலவு வைப்பதாக இருக்கும். உதாரணம், கார் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
6. நிதிக் கல்வி அறிவு..!
பணக்காரர்கள் பணம், முதலீடு பற்றிய கல்வி அறிவைப் பெற்றிருப்பார்கள்; அது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள செலவும் செய்வார்கள். முதலீடு தொடர்பான நல்ல நூல்களை வாங்கி படித்து அது தொடர்பான கல்வி அறிவை பெற்றிருப்பார்கள். நடுத்தர மக்கள் இதற்காக எதையும் செலவு செய்யமாட்டார்கள். மற்றவர்கள் பின்பற்றும் முதலீட்டு வழிகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி நஷ்டமடைவார்கள். நடுத்தர மக்களும் பணக்காரர்கள் ஆக அவர்கள் மேற்கண்ட ஆறு அம்சங்களை பின்பற்றுவது அவசியமாகும்