ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்குப் பாலத்தை ரயில்கள் கடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை கண்டறிய, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்சார் கருவி பொருத்தப்பட்டது. புயல் எச்சரிக்கை எதிரொலியாக பாம்பன் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று அதிகாலை சென்சார் கருவியில் இருந்து அபாய ஒலி கேட்டது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கன்னியாகுமரி – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில், சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில், சென்னை – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் ஆகியவற்றின் சேவை மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை புறப்பட வேண்டிய பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது. பயணிகளின் வசதிக்காக மண்டபத்தில், இருந்து மதுரை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவனம் பொருத்திய கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ராமேஸ்வரம்- மண்டபம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி, சென்னை எழும்பூர் (மெயின் லைன், கார்ட் லைன்), ஓஹா விரைவு ரயில்கள் ஆகியவை மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்டன.