பி.எப்.7 வகை கரோனா குறித்து இந்தியா அச்சப்பட வேண்டாம்: மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா

புதுடெல்லி: பி.எப்.7 வகை கரோனா சீனாவை புரட்டி எடுத்து வரும் நிலையில், அது குறித்து இந்தியா அச்சப்படத் தேவையில்லை என்று மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

சீனாவை புரட்டி எடுக்கும் பி.எப்.7 வைரஸ்: “சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக உயரும் என்றும், மார்ச் மாதத்தில் இது 42 லட்சமாக அதிகரிக்கும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சீனாவில் தற்போது பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும்.” என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பி.எப்.7 வைரஸ்: சீனாவில் இருந்து குஜராத்தின் பாவ் நகருக்குத் திரும்பிய தொழிலதிபர் ஒருவருக்கு ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தினர், அவேராடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு பி.எப்.7 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஷ்ரா கருத்து: பெங்களூருவில் உள்ள டாடா மரபியல் மற்றும் சமூகம் நிறுவனத்தின் Tata Institute for Genetics and Society (TIGS) இயக்குநரும் மூத்த விஞ்ஞானியமான ராகேஷ் மிஷ்ரா, “சீனாவில் வேகமாக பரவிவரும் பி.எப்.7 வைரஸ், ஒமிக்ரானின் துணை வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் குறித்து இந்தியா அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தேவையின்றி கூட்டம் கூடக்கூடாது. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இந்தியா பல்வேறு வகையான கரோனா தொற்றுக்களைப் பார்த்து கடந்து வந்திருக்கிறது. ஆனால், சீனா அப்படி அல்ல. அதனால்தான் அந்த நாட்டில் தொற்று அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.