சென்னை: “தமிழர்களின் தேசிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடக் கூட இலவச அரிசி, இலவச சர்க்கரை, ஒரு முழம் கரும்பு வழங்குவதை நான் ஒரு தேசிய இனத்தின் அவமானமாக கருதுகிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் 41-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லை என்று குற்றம்சாட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அந்த வருத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு முழம் கரும்பு இல்லை என்றால் என்ன? நான் விவசாயிகளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், காலம் முழுக்க உழைக்கிறீர்கள், ஒரு முழம் கரும்பு கூட இல்லாமல் என்ன உழைப்பு அது?
இந்த இனத்துக்கான ஒரே ஒரு தேசிய பண்டிகைதான். அந்த பண்டிகைக்கு ஒரு முழம் கரும்பு இல்லை. இந்த முறையே அசிங்கம் என்று நினைக்கிறேன். காலங்காலமாக உழைக்கிறார்கள், தமிழர்களுக்கான தேசிய பண்டிகை விழா பொங்கல்.
அந்தப் பொங்கல் பண்டிகையை கொண்டாடக் கூட இலவச அரிசி, இலவச சர்க்கரை, ஒரு முழம் கரும்பு வழங்குவதை நான் ஒரு தேசிய இனத்தின் அவமானமாக கருதுகிறேன். அதில் எனக்கே கருத்தே கிடையாது” என்று அவர் கூறினார்.