கடலூர்: தமிழக அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யக் கோரி கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடியில் பன்னீர் கரும்புடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலூர் – விருத்தாசலம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்தக் கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக, இந்தக் கரும்பை வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி இருப்பார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. இதேபோல் திமுக ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் பன்னீர் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.23) காலை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடியின் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பன்னீர் கரும்புடன் கடலூர்- விருத்தாசலம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் சாலையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சிலர் பட்டை போட்டுக் கொண்டு தட்டை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் வர வழிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாய சங்கத் தலைவர் குமரகுரு கூறுகையில்: “பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாததால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து பன்னீர் கரும்பு பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும். இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதுகாப்படும். அரசு கொள்முதல் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று குமரகுரு கூறியுள்ளார்.