தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான
கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
அதன்படியே, சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாக, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
இந்த பொங்கல் பரிசில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்குமே பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி – 50 கிராம், திராட்சை – 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசிப்பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் -100 கிராம், மல்லி தூள் -100 கிராம் ஆகியவை, வழங்கப்பட்டது.
இவற்றுடன் கடுகு – 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு – 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1, கோதுமை 1 கிலோ, உப்பு – 500 கிராம், துணி பை ஒன்று மற்றும் கரும்பு ஆகியவையும் வழங்கப்பட்டது.
இதேப்போல் நடப்பாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியானபடி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்தளவுக்கு எதிர்பார்ப்பு மிகுந்த சூழலில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனால், 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ. 2,356.67 கோடி செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையில், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று அறிவித்துள்ளது.
வழக்கமாக, பொங்கல் பரிசில் 21 பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்க கோரி பல்வேறு பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை? என, அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
பரிசுத் தொகுப்பில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பு கொடுத்தால், சிறிய முந்திரியாக இருப்பதாகவும், வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் பலரும் புகார் அளிக்கின்றனர்.
இதை உணர்ந்ததால் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 1000 ரூபாயை பொங்கலுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார். இவ்வாறு அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்து இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.