பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்குக – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த உருப்படாத ஆட்சியாளர்கள், ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும் பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த திமுக அரசும், 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று இந்த திமுக அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான்.

இந்த அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதல்வர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.