புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி உலகமெங்கும் பரவ ஆரம்பித்த கொரோனா அலை, இப்போதுதான் உலக நாடுகள் பலவற்றிலும் கட்டுக்குள் வந்தது.
இந்தியாவில் இந்த தொற்று தினமும் 200-க்குள் அடங்கி வந்தது.
ஆனால் சீனாவில் உருமாறிய கொரோனாவான ‘பிஎப்.7’ அலை எழுச்சி பெற்று வருகிறது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளதால், சீன ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கால் தடம் பதித்துள்ளது. குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்தநிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கொரோனா உறுதியானோரின் ரத்த மாதிரிகளை உடனே மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, கோவிட்19 நிலைமை மற்றும் தயார்நிலை குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவும், கோவிட்19 மேலாண்மைக்கான அனைத்துத் தயார்நிலையையும் வைத்திருக்கவும் வலியுறுத்தினார். முந்தைய தொற்றுகளின் போது நாம் செய்ததைப் போல மத்திய மற்றும் மாநிலங்கள் கூட்டு மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.