மக்களின் வாழ்க்கை தரத்தை உயர வைப்பதே திராவிட மாடல் அரசு: உலக சாதனை மரம் நடும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல்: காடுகள், நல்ல சூழலை தந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர வைப்பதுதான் முதல்வரின் திராவிட மாடல் அரசு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். முதலாவதாக, நேற்று காலை திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி  வைத்தார். பின்னர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக  சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆய்வு பணியின்போது  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ  ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மேயர்  இளமதி ஜோதிபிரகாஷ், துணைமேயர் ராஜப்பா, கூடுதல் தலைமை செயலர்  அதுல்யா மிஸ்ரா, அரசு சிறப்பு செயலர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், கலெக்டர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் எலைட் உலக சாதனை  நிகழ்விற்காக 4 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.  4 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடும்  உலக சாதனை பணியை துவக்கி வைத்து பேசுகையில்,  தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான  நீர்நிலைகளை சீர்செய்து, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். நல்ல சூழலை தருவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இதனைத்தான் உருவாக்க நினைக்கிறது தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசு. 2021-  2022ம் ஆண்டின் பட்ஜட் கூட்டத்தொடரில் காலநிலை மாற்றத்திற்கான திட்டங்களை  தொடங்குவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

இந்த மரம் நடும் நிகழ்ச்சியை நிறுத்துவதற்காக பாஜகவினர்  நீதிமன்றம் சென்று குட்டு பெற்று வந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில்  மாவட்டத்தில் 13 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து, மிகப்பெரும் சாதனையை  செய்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி, என்றார்.

இதற்கிடையே  மரக்கன்று நடவு செய்ததை எலைட் உலக சாதனை குழுவினர், ஏஷியன் ரெக்கார்டு  அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  குழுவினர் உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ், விருதுகளை வழங்கினர்.

சொன்னது 4 மணிநேரம் முடித்தது 2 மணிநேரம்: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் அமைச்சர் அர.சக்கரபாணி, உலக சாதனையாக 4 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்றும் நடும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். 6 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடுவதற்கு 4 மணிநேரம் என்று சொன்ன நிலையில், அப்பணியை 2 மணிநேரத்திற்குள்ளேயே முடித்து விட்டனர். இது மேலும் ஒரு உலக சாதனையாக அமைந்து விட்டது.

முதல் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘நான் திண்டுக்கல்லுக்கு எம்எல்ஏ, எம்பி தேர்தலின்போது பிரசாரம் செய்ய வந்துள்ளேன், மாநில இளைஞரணி செயலாளராக வந்துள்ளேன். எம்எல்ஏவாக வந்துள்ளேன். அமைச்சராக பதவி ஏற்ற பின் துறை சார்பில் முதல்  ஆய்வுக்கூட்டம் நடத்த தற்போது திண்டுக்கல் வந்துள்ளேன். நான் இளைஞரணி  செயலாளராக முதன்முதலில் பதவி ஏற்று ஆசி பெற்றது பேராசிரியர் அன்பழகனிடம்  தான். இந்த நேரத்தில் அவரது நினைவை போற்றுவோம். அவரது நூற்றாண்டு  விழாவையொட்டி அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் இனமான பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு  திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.