மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப் படுத்துவது தொடர்பில் கோபா குழுவுக்கு …

அரசாங்க நிறுவனங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு (கோபா குழு) ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான விசேட நிகழ்வொன்று கோபா குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது.

கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹசிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மதிப்பீட்டு சங்கத்தின் (Sri Lanka Evaluation Association / SLEvA) பிரதிநிதிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

தேசிய மதிப்பீட்டு சட்டமூலத்தின் பூர்வாங்க வேலைகளை நிறைவு செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் இலங்கையின் தேசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற விசேட குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவும் போது மதிப்பீட்டுப் பிரிவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

முறையான தேசிய மதிப்பீட்டு செயல்முறையின் அவசியத்தை வலியுறுத்திய கோபா குழுவின் தலைவர், இது ஒரு பூர்வாங்க கலந்துரையாடல் என்றும், எதிர்காலத்தில் இது பற்றி மேலும் விரிவாகக் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ(மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.