“அரசியல் காரணங்களுக்காக முதுகில் குத்துபவர்கள் மனிதர்களே கிடையாது. பெங்களூர் சிறைச்சாலைக்கு செல்லும்போது கூட அதிமுகவை ஆட்சியில் அமர வைத்துவிட்டு சென்றேன். ஆனால் மனம் மாறக் கூடியவர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர்” என்று வி கே சசிகலா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலையில் உள்ள நேர்ச்சை தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லமொன்றில் வி.கே.சசிகலா கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். தொடர்ந்து ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக், உணவு உள்ளிட்டவைகளை அவர் வழங்கினார். இதையடுத்து அங்குள்ள நேர்ச்சை தேவாலயத்தில் வி.கே.சசிகலா வழிபாடு நடத்தினார்.
பின்னர் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுகவை எங்களால் இணைக்க முடியும். அதற்காக வேலையை தொடங்கியுள்ளேன். நிச்சயம் அதிமுகவை ஒன்றிணைக்க முடியும் என்பதால் அதைநோக்கி செயல்பட்டு வருகிறேன். ஓபிஎஸ், இபிஎஸ் தனிப்பட்ட முறையில் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் தாய் எப்படி செயல்படுவாரோ அதைப்போல தான் நான் இருக்கிறேன். அதிமுக குறித்து தொண்டர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அதிமுக எதிர்கட்சி அளவுக்கு செயல்படவில்லை என சொல்வது தவறு. தொண்டர்களை பொறுத்தவரை அதிமுக தான் எதிர்கட்சி என்ற சூழல் உள்ளது. ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு கரும்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்தோம். இந்த முறை கரும்பு வழங்கவில்லை. கரும்பு வழங்காததால் விவசாயிகளுக்கு தான் பாதிப்பு. இடைத்தரகர்கள் இதனால் லாபம் அடைவார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது ஒன்று, தற்போது நடப்பது வேறு. மக்கள் அதனை உணர்ந்துகொள்வார்கள்.
ஆறுமுகசாமி ஆணையம் எழுத்து மூலம் பதில் தர எனக்கு வாய்ப்பு அளித்து. அதனால்தான் நான் நேரில் செல்லாமல், எழுத்து முறையில் பதில் அளித்தேன். இப்பிரச்னைகளுக்கு முடிவு எட்ட வேண்டும் என்று தான் நான் பதில் அளித்தேன். அரசியல் காரணங்களுக்காக முதுகுக்கு பின்பு குத்துபவர் மனிதனே கிடையாது. எங்களுக்கு (ஜெயலலிதா மற்றும் சசிகலா) கருணாநிதி செய்யாத தொந்தரவுகளா? நாங்கள் இரண்டு பேரும் பெண்களாக இருந்தாலும் அதனை எதிர்த்து நின்றோம். மக்களுக்கு பலவற்றை செய்தோம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் எதுவும் மறைக்கவில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள்தான் அங்கு இருந்தார்கள். அவர்கள் இருக்கும்போது, எதையும் மறைக்க முடியாது. சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு செல்ல ஜெயலலிதா தான் விரும்பவில்லை. இங்கேயே சிகிச்சை பெறுவதாக அவர் தான் கூறினார். ஜெயலலிதா இறப்பு தேதி சர்ச்சை என்பது ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று செய்யப்படுகிறது. தற்போது கூறப்படும் இறப்பு தேதி தவறு.
மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா 19 ஆம் தேதி வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராமல் அது நிகழ்ந்தது. அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று கூறியதை செய்யவில்லை. திமுக டிவியில் மட்டும் விளம்பரப்படுத்தும் ஆட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியை கூட நான் திட்டுவது இல்லை. தீபாவுக்கும் அப்படித்தான். தீபாவுக்கு அறிவுரை தான் கொடுக்கிறேன்.
நல்ல டாக்டர் இருந்தால், எந்தவொரு நோயாளியையும் நாம் காக்கலாம். அதிமுகவை காக்க தற்போது டாக்டர் தேவை. பயந்து ஓடி ஒளியும் ஆள் நான் கிடையாது. அதிகாரம் வந்ததால் மற்றவர்கள் மனங்கள் மாறலாம். ஆனால் நான் எவ்வளவு உயர் சென்றாலும் நான் கால்களை பார்த்து தான் நடப்பேன். அதனால் தான் பெங்களூர் சிறை செல்லும்போது கூட அதிமுகவை ஆட்சியில் அமர வைத்துவிட்டு சென்றேன்.
அதிமுகவில் முதன்மை இடத்துக்கு வரலாம் என்று பிள்ளைகள் போல யார் வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அவர்களுக்கு தாய் என்பவர் ஒருவர். தான் தாயாக இருக்கிறேன்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM