மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள தடுப்பு மருந்து முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு முதற்கட்டமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின்னர் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவில் தற்போது Bharat Biotech இன் Covaxin, Serum Institute இன் Covishield மற்றும் Covovax, Russian Sputink V மற்றும் Biological E Ltd இன் Corbevax ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவைகள் மட்டுமே CoWin எனப்படும் இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இணையதள போர்ட்டலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் தயாரித்த iNCOVACC எனப்படும் மூக்கின் வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தடுப்பூசியின் விலை விரைவில் முடிவு செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கிடைக்கும். முதற்கட்டமாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக இந்த மருந்து செலுத்தப்படவுள்ளது. iNCOVACC மருந்து மூக்கின் வழியே செலுத்தப்படும் இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கொரோனா:
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் (BF.7) அமெரிக்காவையும் தாக்க தொடங்கியுள்ளதால் பலி எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலையை போலவே உயிர் பலி எண்ணிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் தொற்று இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டிருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மிக பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அந்தந்த மாநில அரசுகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மூக்கின் வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.