புதுடில்லி,?:’பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதை, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையோர், ‘பூஸ்டர் டோசாக’ செலுத்தலாம்.
நம் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை தயாரித்தது.
இது, நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்நிறுவனம் ஊசியாக இல்லாமல், மூக்கு வழியாக செலுத்தும் வகையிலான, ‘இன்கோவேக்’ என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இரண்டு சொட்டுகள் உடைய இந்த மருந்தை, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர், பூஸ்டர் டோசாக செலுத்தலாம்.
குறிப்பாக, கோவாக்சின் அல்லது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தியவர்கள் இதை பூஸ்டர் டோசாக செலுத்தலாம்.
இந்த மருந்துக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து, இது தற்போது தனியார் மருத்துவமனைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்தும் இதை பெறலாம்.
இந்த மருந்தின் மூன்று கட்ட பரிசோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை இதற்கு சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள செயின்ட் லுாயிஸ் பல்கலையுடன் இணைந்து, இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரிய பாதிப்பு ஏற்படாது’
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, டாடா மரபணு ஆய்வு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது: சீனாவில் உருமாறிய புதிய ‘பி.எப்., – 7’ வகை வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று, நம் நாட்டிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. சீனாவில் தற்போது பரவுவது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய கொரோனா வகை தொற்று. ஒமைக்ரானுக்கும், தற்போது பரவும் தொற்றுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது; சிறிய வேறுபாடு மட்டுமே இருக்கும். நம் நாட்டில் ஏற்கனவே ஒமைக்ரான் அலை முடிவுக்கு வந்து விட்டது. எனவே, இந்த புதிய தொற்றால் நமக்கு பெரிய பாதிப்பு இருக்காது. சீனாவில் மூத்த குடிமக்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி நேரத்தை வீணடிக்க அரசு விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, இந்த உருமாறிய கொரோனா வயதானவர்களை வேகமாக தாக்குகிறது. அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால், இளைஞர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. நம் நாட்டை பொறுத்தவரை பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதனால் உருமாறிய கொரோனா தொற்றுகளை நாம் எளிதில் சமாளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்