புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியானது மக்களுடன் தொடர்பற்றது ஆகிவிட்டது. இப்போது அவர்கள் நடந்தும் யாத்திரை தங்களின் இருப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே” என்று மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் ஹரியாணாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிப்பதால் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு பாஜகவுக்கு அச்சம் என்று கூறினர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நரேந்திர தோமர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியைக் கண்டு பாஜகவுக்கு பயம் ஏற்படுவதற்கான அவசியமில்லை. காரணம் காங்கிரஸ் கட்சி இப்போதைய அரசியல் சூழலுக்கு பொருத்தமற்றதாகிவிட்டது. அவர்கள் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை தனது இருப்பை உறுதி செய்ய மட்டுமே நடக்கிறது.
இந்தியா ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. உடைந்து போய்விடவில்லை. எல்லா பக்கங்களில் இருந்தும் இந்தியா இணைந்தே இருக்கிறது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வளர்கிறது என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை ராஜஸ்தானில் நடந்தபோது அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டுக்கும், ராகுல் காந்திக்கும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் “இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற முடியாவிட்டால் தயவு செய்து யாத்திரையை முடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.