டெல்லி : ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் திமுக எம்.பி.கனிமொழி பங்கேற்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைப்பயணத்தை முடித்து நேற்று முதல் அரியானா மாநிலத்தில் தந்து பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இன்று அரியானாவில் கெர்லி லாலாவில் திமுக எம்.பி. கனிமொழியும் பங்கேற்று நீண்ட தூரம் நடந்து சென்றார். இன்றைய பயணத்தில் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, மூத்த தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஒற்றுமை இந்தியா நடைபயணம் குறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி. இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபோடும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றத்தில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாளை ராகுல் காந்தியின் நடைபயணம் டெல்லிக்குள் நுழைகிறது. இதில் ராகுலின் அழைப்பை ஏற்று தானும் பங்கேற்கபோவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். டெல்லியில் நாளை ராகுல் நடைபயணம் நடைபெற உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் நடைப்பயணத்தை ரத்து செய்யுமாறு ராகுல்காந்திக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.