ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டத்தை சிவகாசி கோட்டத்துடன் இணைத்து தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 3-ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆனால் அரசாணை வெளியிட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் நடைமுறைக்கு வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி என இரு வருவாய் கோட்டங்கள் இருந்தன. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சாத்தூரை தனி வருவாய் கோட்டமாக அறிவித்தார். அதன்படி சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்டங்களில் இருந்த கிராமங்களை இணைத்து வெம்பக்கோட்டை வட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் சாத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை ஆகிய மூன்று வட்டங்களை கொண்டு சாத்தூர் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
இதனால் ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தை கடந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. மேலும் முகவூர், தேவதானம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட எல்லையோர கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு 70 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டும் என்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் சாத்தூர் கோட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்தே ராஜபாளையம் வட்டத்தை சிவகாசி கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதேபோல் அதிகாரிகளும் ஏதாவது ஆய்வுக்கு கூட்டத்திற்கு சென்றால் ஒரு நாள் முழுவதும் வீணாகி பணிகள் தேங்குவதாக புகார் தெரிவித்தனர்.
இதையெடுத்து அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ராஜபாளையம் தாலுகாவை சிவகாசி கோட்டத்துடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிவகாசி கோட்டத்துடன் ராஜபாளையம் தாலுகா இணைப்பு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.