புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய -சீன ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த 20-ம் தேதி நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையேஎல்லைக்கோடு வரையறுக்கப்படாததால், இருநாட்டு ராணுவத்தினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பிரச்சினைகளை தீர்க்க இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் 17-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 20-ம் தேதி அன்று சீனப் பகுதியில் உள்ள சுசூல்-மோல்டா எல்லையில் நடந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பச்சி நேற்று கூறினார். இருநாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையையும் அவர் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:
கிழக்கு லடாக் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருதரப்பு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்படி, ராணுவ கமாண்டர்கள் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது எல்லைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவும், இருதரப்பு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இருதரப்பும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், ராணுவ கமாண்டர்கள் மற்றும் தூதரக அளவிலான அளவிலான பேச்சுவார்த்தையை தொடரவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.