மிர்புர்,
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாகிர் ஹசனும், நஜ்முல் ஹூசைன் ஷன்டோவும் களம் புகுந்தனர்.
ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஜாகிர் ஹசன் (15 ரன்) உனட்கட் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் ஸ்லிப்பில் பிடிபட்டார். நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 24 ரன்னில் வெளியேறினார்.
இதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ‘ஸ்விங்’ தாக்குதலிலும், அஸ்வின் சுழல் ஜாலத்திலும் வங்காளதேசத்துக்கு இடைவிடாது நெருக்கடி கொடுத்து நிலைகுலைய வைத்தனர். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக் மட்டும் நிலைத்து நின்று போராடினார்.
வங்காளதேச அணி 200 ரன்களை கடக்க உதவிய மொமினுல் 84 ரன்களில் (157 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார். முன்னதாக கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 16 ரன்னில் வீழ்ந்தார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்காளதேச அணி 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி சற்று தடுமாறியது. கேப்டர் ராகுல் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் எல்.பி.டபில்யூ. முறையில் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த புஜாரா(24 ரன்கள்), விராட் கோலி(24 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில் ரிஷப் பண்ட் 93 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86.3 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், அடுத்து வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.