புதுடில்லி:சிக்கிம் மாநிலத்தில் மலைப் பாதையில் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து, 16 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்குப் பகுதியில், இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள செட்டன் என்ற இடத்தில் இருந்து, மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர்.
ஜெமா என்ற இடத்தில் உள்ள மலைப்பாதை வளைவில் வாகனங்கள் திரும்பிய போது, ஒரு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த வாகனத்தில் 20 பேர் இருந்தனர். வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதில், மூன்று ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 13 வீரர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர், பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய நான்கு பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்; 16 உடல்களையும் மீட்டனர்.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
துணிச்சல் மிகுந்த நம் ராணுவ வீரர்கள், சிக்கிமில் நடந்த விபத்தில் உயிரிழந்திருப்பது, தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், ‘வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வீரர்களின் சேவைக்கு நாடு கடமைப் பட்டுள்ளது. காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement