புதுடெல்லி: வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் ரேண்டம் மாதிரி பரிசோதனை நடைபெற உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு சனிக்கிழமை முதல் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு தோராயமாக கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வெளிநாடுகளில் இருந்து வருவோரில் ரேண்டமாக 2 சதவீத பயணிகளை விமான நிலையங்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அழைத்து வரவேண்டும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
விமான நிறுவனங்கள் அந்தந்த விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ரேணடம் மாதிரி சோதனை முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட பயணிகள் உண்மையான தொடர்பு எண், முகவரியை விமான நிலைய சுகாதார அதிகாரிகள மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் தரவேண்டும்.
இந்தச் சோதனைக்கான கட்டணம் முறையாக சான்றளிப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்ட பின்னர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் விமான நிலைய சுகாதாரத் துறையால் திருப்பி அளிக்கப்படும்.
இந்தச் சோதனைக்காக விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள் சோதனைக்கான மாதிரிகளை கொடுத்த பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம்.
கரோனா தொற்று உறுதி செய்யப்படும் பயணிகளின் பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த நோய்த்தடுப்பு திட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும். பின்னர் அவை மேல் நடவடிக்கைகளுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
எந்த ஒரு பயணிக்காவது கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மாதிரியை மரபணு சோதனைக்காக நியமிக்கப்பட்ட INSACOG ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் (டிஜிசிஏ) அனைத்து வணிக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆப்பரேட்டர்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.