“50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் கொத்தடிமைகள்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்!" – சீமான் காட்டம்

கக்கன் மறைவு தினத்தை முன்னிட்டு இன்று சீமான் சென்னையில் அவரின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காப்புக் காடுகளைச் சுற்றி சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் போன்ற பணிகளுக்கு இருந்த தடையை நீக்கிய தமிழக அரசின் செயல்பாட்டை எதிர்க்கிறோம். அதைக் கண்டித்து போராடவிருக்கிறோம். ஏற்கெனவே, நியூட்ரினோ திட்டத்தால் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இதில் அரசின் குவாரி அனுமதி வேறு. இதுதான் தி.மு.க சுற்றுச்சூழலை பாதுகாக்கும் லட்சணம்.

காடு

சமூக வலைதளங்கள் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் பெருகிவிட்டன. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் நல திட்டங்களுக்கு ஆதரவளிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதற்கு?

குஜராத்தில் ரூ.20,000 கோடிக்கு ஹெராயின் கைப்பற்றப்பட்டது. ஆனால், அது தொடர்பாக யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழகத்திலிருக்கும் அகதிகள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியதுதானே… அதை ஏன் செய்யவில்லை. இதில் ஆதாயம் தேடுவதாக தமிழ் தேசியவாதிகள் மீது குற்றம்சாட்டுவது ஏன்?

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசை தமிழ் மக்களின் தேச அவமானமாக கருதுகிறேன். காலமெல்லாம் உழைக்கும் விவசாயி, வருடத்தில் ஒருமுறை வரும் பொங்கலுக்கு இலவசம் பெற்றுக் கொண்டாடும் அளவுதான், அவர்களின் வாழ்க்கை தரம் இருக்கிறதென்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது?

மன்னராட்சியில் வாரிசு அரசியல் என்றால் மக்களுக்காக மன்னர்களின் குடும்பம் போருக்கு போகும். இந்தியாவில் எந்த அரசியல்வாதியின் மகன் ராணுவத்தில் பணியாற்றுகிறார். ஆனால், உதயநிதியின் மகன் இன்பநிதியையும் முதலமைச்சராக்கி பார்க்க வேண்டும் என இரண்டு முறை எம்.எல்.ஏ-வான ஒருவர் கூறியிருக்கிறார்.

உதயநிதி – ஸ்டாலின்

50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் கொத்தடிமைகள்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் நம்ம ஸ்கூல் ஃபவுன்டேஷன் திட்டத்திக்கு மக்களிடம் பிச்சைக் கேட்கிறார்கள். ஆனால், ரூ.39 கோடிக்கு சமாதி, ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது. மக்களிடம் பணம் வாங்கி பள்ளிக்கூடம் கட்டினால் அரசு எதற்கு இருக்கிறது? கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது? கோயில் புனரமைப்பில் கொள்ளையடித்த, சிலை கடத்தல் வழக்கில் பெயர் இடம்பெற்ற வேணு சீனிவாசனிடம் எதற்காக அந்த திட்டத்தை வழங்க வேண்டும்? இது எப்படி சேவையாகும்?

மக்களின் பிரச்னையைப் பேச நேர்மை இல்லாதவர்கள்தான் வாட்ச் பிரச்னையை பேசிக்கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறோம். நான் சட்டமன்றத் தேர்தலில் நிற்பேன்.

தமிழக அரசுக்கென தனியாக ஒரு விமானமாவது இருக்கிறதா? சென்னையில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து தமிழகத்துக்குள்ளேயே சரியான விமானப் போக்குவரத்து கிடையாது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

சென்னை விமான நிலையம் சிறியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டோ, அல்லது புகார் மனுவோ வராத நிலையில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து எதற்காக இன்னொரு விமான நிலையம்? பரந்தூருக்கு விமான நிலையம் வரவிடமாட்டோம். இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது என ஆட்சியில் இருப்பவர்கள் கூறுவார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.