தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதலித்த வாலிபருடன் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி. இவர் தனது குடும்ப நண்பரான சதீஷ்குமார் என்பவரை 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்துகொண்டார்.
சதீஷ்குமார் வேறொரு சமூகத்தை (வன்னியர்) சேர்ந்தவர் என்பதால் தங்களது காதலுக்கு தந்தை சேகர்பாபுவும், தாய்மாமன் யுவராஜும் கொலை செய்துவிடுவார்கள் என பயந்து பெங்களூருவுக்கு சென்றுவிட்டார் ஜெயகல்யாணி. இந்தநிலையில், சதீஷ்குமார் மீது பல போலி வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வர காவல்துறையுடன் சேர்ந்து சேகர்பாபு சதி செய்வதாக ஜெயகல்யாணி வீடியோ வாயிலாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பான எந்த வழக்குகளுக்கும் இதுவரை கோர்ட்டில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், எனது தந்தையால் கணவருக்கு ஆபத்து இருப்பதால் நாங்கள் தலைமறைவாக இருந்து வருகிறோம். எனது கணவருக்கும், குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு அமைச்சர் சேகர்பாபுவும், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் எனது தாய்மாமன் யுவராஜ் ஆகிய மூவரும்தான் காரணம். தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தால் நாங்கள் தமிழகத்துக்கு வர தயார். எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. யார் மீது தவறு உள்ளது யார் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை என்னிடம் உள்ள ஆதாரத்தை பார்த்தாலே தெரிந்துவிடும்.
எனது கணவர் மீது ஏகப்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. வெளியில் வந்தால் ஆபத்து என்று கருதி நீதிமன்றத்துக்கு கூட எங்களால் செல்ல முடியவில்லை என இவ்வாறு ஜெயகல்யாணி கோரிக்கை வைத்துள்ளார்.
தந்தைக்கு பயந்து காதலனை பதிவு திருமணம் செய்துகொண்ட ஜெயகல்யாணி தான் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டிருக்கலாம் என்றும் அப்போதாவது தந்தை தங்களை ஏற்றுக்கொள்வாரா என்ற எதிர்பார்க்கலாம் எனவும் பொதுவாக பார்க்கப்படுகிறது.