இன்று ஐபிஎல் 2023-க்கான மினி ஏலம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 400 வீரர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். ஏலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 2வது வீரராக வந்தார் இங்கிலாந்தின் சமீபத்திய ரைசிங் ஸ்டார் ஹாரி ப்ருக். ரூ.1.50 கோடி ஆரம்ப விலையோடு தொடங்கியது அவரின் ஏலம். ராஜஸ்தான் ஏலத்தைத் தொடங்கியது, பிறகு பெங்களூரும் சேர்ந்து ஏலத் தொகை அதிகரித்தது. 5 கோடி வரை ஏலம் போன பிறகுதான், ஹைதராபாத் களத்தில் குதித்தது. கடைசிவரை ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியிடையே நடத்த கடும் போட்டியில், கடைசியில் ஹைதராபாத் அணி ரூ.13.25 கோடிக்கு ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தது.
ஏலக் கணிப்பின்போதே, இங்கிலாந்து வீரர்கள் அதிக விலைபோவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவே நடந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இதுவரை வாங்கப்பட்ட வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார் ஹாரி ப்ரூக். இதற்கு முன்னர் மணிஷ் பாண்டே ரூ.11 கோடி வாங்கப்பட்டதுதான் அந்த அணி கொடுத்த அதிக விலையாக இருந்தது.
இந்த அளவுக்கு அவர் விலை போகக் காரணம், டி20 போட்டிகளில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்து உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 20 போட்டிகளில் 372 ரன்கள் மற்றும் ஏறக்குறைய 138 ஸ்ட்ரைக் ரேட் வைத்து உள்ளார். மேலும், ப்ரூக் 2022 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
2022-23-ல் நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட் மற்றும் டி20-ஐ போட்டிகளில் நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளார். நடந்த முதல் டெஸ்டின் போது, அவர் இரண்டு இன்னிங்ஸிலும் அதிக ஸ்கோரை அடித்தார். முதல் இன்னிங்ஸில் 153 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 87 ரன்களும் எடுத்து, கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது நல்ல ஃபார்மிலும் உள்ளார். ஆனால் ஓர் அறிமுக வீரர் மீதான இவ்வளவு பெரிய முதலீடு ஹைதராபாத் அணிக்கு உதவுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்!