சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி. அக்ரி பாடப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 250 இடங்களும், சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்களும் உள்ளன. இது தவிர பி.எஸ்.சி. தோட்டக்கலை பாடப்பிரிவில் 100 இடங்கள் உள்ளன.
இந்தப் பாடப்பிரிவுகளில் படிப்பதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் தகுதி உடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் இராம. கதிரேசன் இன்று வெளியிட்டார்.
இதில் 198.50 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று கடலூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் முதலிடத்தை பிடித்தார். 197.50 மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று பண்ருட்டி மாணவர் குணசேகரன் இரண்டாம் இடத்தையும், அதே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த மாணவி கௌசிகா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் கலந்துகொள்ள கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வருகிற ஜனவரி 2 ஆம் தேதி கடைசி நாள் எனவும், தர வரிசை பற்றிய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM