“அமைச்சர் உதயநிதியை சின்னவர் என அழைக்கவேண்டாம்; அதற்கு பதிலா…"- ஐ.லியோனி யோசனை!

அதிமுக முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, திமுக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுகவின் மூத்த முன்னோடிகளை கௌரவிக்கும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று (23.12.22) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கௌரவித்தார்.
image
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டத்திற்கு பலமுறை வந்து உள்ளேன். இருப்பினும் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். திண்டுக்கல் மாவட்டம் திமுக கோட்டையாவதற்கு காரணம் அமைச்சர் ஐ.பெரியசாமி தான். அவர் கலைஞரோடு பயணித்தவர். ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக திமுக உள்ளது.
திமுகவிற்கு தான் வரலாறு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. அதிலும் அதிமுகவை பொறுத்தவரை, திமுகவை குறைசொல்வது ஒன்று தான் அதிமுகவின் வரலாறு. அதிமுக சந்தர்பவாதம் கொண்ட கட்சி. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் முதல்வர், துணை முதல்வர் என பங்களிப்போடு இருந்தவர்கள். தற்போது இருவரும் அடித்து கொள்கின்றனர்” என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளை சேர்ந்த 7 ஆயிரம் கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி & குடும்பத்தினருக்கு புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்தோம். அண்ணன் @IPeriyasamymla, நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைந்த அண்ணன் @r_sakkarapani, சகோதரர் @IPSenthil ஆகியோருக்கு நன்றி. pic.twitter.com/ygHENifcMA
— Udhay (@Udhaystalin) December 23, 2022

மேலும் பேசுகையில், “திராவிடமாடல் பயிற்சி பாசறை கூட்டம் மாநிலம் முழுவதும் 300 இடங்களில் நடத்தி உள்ளோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து முதல்வர் நிறைவேற்றி வருகிறார். நேற்று கூட பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன். தற்போது அமைச்சராக உள்ளதாக கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
image
விழாவில் பேசிய ஐ.லியோனி, “அமைச்சர் உதயநிதியை சின்னவர் என்று இனி அழைக்க வேண்டாம். அம்மா – சின்னம்மா என்பது அந்த கட்சியோட முடியட்டும். வரும் காலங்களில் அமைச்சர் உதயநிதியை `இளைய தலைவர்’ `மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்’ என்று அழைக்க வேண்டும்” என பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதேபோல நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில்  உலக சாதனை நிகழ்வாக 117 ஏக்கர் பரப்பளவில் 4 மணி நேரத்தில் 6 இலட்சத்து 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 16,500 பேர் பங்கேற்றனர். இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளச்சி துறை அமைச்சர் ஜ.பெரியசாமி, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் இரா.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதியழகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட ஆட்சியர் விசாகன்  ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இதே திண்டுக்கல்லில் இதற்கு முன் ஒரு அமைச்சர் இருந்தார். கடந்த ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த அவர், `அம்மா இன்னைக்கு இட்லி சாப்பிட்டாங்க, இட்லிக்கு சட்னி வைத்து சாப்பிட்டாங்க… அம்மா இன்னைக்கு ஜூஸ் சாப்பிட்டாங்க’ என்றெல்லாம் வகை வகையாக பொய் சொல்லிக்கொண்டு வந்தார்.
பின் ஒரு நாளில், `எங்களை மன்னித்துவிடுங்கள்; நாங்கள் பொய் கூறிவிட்டோம்’ என சொல்லி ஓடிப் போய்விட்டார். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் அப்படியில்லை நிலை. இன்றும் ஒரு வனத்துறை அமைச்சர் உள்ளார். மரியாதைக்குறிய அமைச்சர் மதிவேந்தன், ஒரு மருத்துவராவார். அவருடைய நல்ல செயல்பாடுகள் மூலம், முன்னாள் வனத்துறை அமைச்சரின் செயல்பாடுகளை அவர் மறக்கடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.