சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவிய காட்சிக்கூடம் திருக்குறளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை தாங்கியஓவியர் டிராட்ஸ்கி மருது, வெற்றிபெற்ற 15 ஓவியர்களுக்கு தலா ரூ.40ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசும்போது, “அரசு பள்ளி, கல்லூரிகளில் ஓவியத்தை பாடத்திட்டமாக கொண்டுவர வேண்டும்” என யோசனை தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் சிறப்புரையாற்றும் போது,“தமிழர்களின் நெஞ்சங்களில் மட்டுமல்லாமல், பிற நாட்டினரின் நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் ஒரே உலகப் பொதுமறை திருக்குறள்தான். திருக்குறள் தந்த திருவள்ளுவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசின் கடிதங்களிலும், அரசாணைகளிலும் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படுகிறது” என்றார்.
முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் வரவேற்றார். முதுகலை மாணவர் சு.உத்தமராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருக்குறள் ஓவியக்காட்சி பொறுப்பாளர் து.ஜானகி நன்றி கூறினார். பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.