பெய்ஜிங்: சீனாவில் கரோனா தினசரி பாதிப்பு 3.7 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டம் பெய்ஜிங்கில் கடந்த புதன்கிழமை நடந்தது. இதில் சீனாவின் கரோனா பரவல் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த வாரத்தில் சீனாவின் தினசரி கரோனா பாதிப்பு 3 கோடியே 70 லட்சம் என்று கணக்கிடப்பட்டதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்தது. இது உலகளவில் மிக அதிகமான தொற்று பரவலாகும்.
டிசம்பர் மாதத்தில் முதல் 20 நாளில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் அளவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஜனவரியில் கரோனா தொற்று பாதிப்பு சுமார் 40 லட்சமாக இருந்ததுதான் மிக அதிக அளவாக இருந்தது.
என்ன காரணம்? கரோனா கட்டுப்பாடுகளை சீனஅரசு உடனடியாக தளர்த்தியது தான் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. சீன மக்களிடையே எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே குறைவாகவும் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிசுவான் மாகாணம், தலைநகர் பெய்ஜிங் ஆகிய இடங்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பிசிஆர் பரிசோதனை மையங்கள் இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்டுவிட்டன. துரித பரிசோதனை மூலம் மட்டுமேசீன மக்கள் தொற்று பாதிப்பைகண்டறிகின்றனர். அறிகுறியற்ற கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வெளியிடுவ தையும் சீனா நிறுத்திவிட்டது.
ஜனவரியில் உச்சக்கட்டம் இந்நிலையில் இந்த கரோனா பாதிப்பு கணக்கெடுப்பை சீனா எவ்வாறு மேற்கொண்டது என்பது தெரியவில்லை. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்திடம் செய்தி நிறுவனங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சீனாவில் கரோனா பாதிப்பு இந்த மாதம் அல்லது ஜனவரி மாதம் மத்தியில் உச்சத்தை எட்டும் என மெட்ரோ டேட்டா டெக் தரவு ஆலோசனை நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சென் குவின் தெரிவித்துள்ளார்.
திணறும் நிர்வாகம்: சீனாவில் கரோனா பாதிப்பால் எவ்வளவு பேர் இறந்தனர் என்பது குறித்தும் சீன தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக இறந்த வர்கள் மட்டுமே கரோனா இறப்புஎண்ணிக்கையில் சேர்க்கப்படுகின்றனர். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளதால், நிலைமையை கையாள முடியாமல் தகன மையங்கள் திணறுகின்றன.