“எனக்கு தலைவர் பதவி கொடுத்தால் என்ன தப்பு?!" – உரிமை கொண்டாடும் விஜயதரணி

தமிழ்நாடு காங்கிரஸில் கோஷ்டி மோதல்களுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட சண்டையை நாடே பார்த்தது. இந்தநிலையில், `தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி பெண் ஒருவருக்கே ஒதுக்கப்பட வேண்டும். அது எனக்கே கிடைக்க வேண்டுமென’, போர்க்கொடி தூக்கியிருக்கிறார் விஜயதரணி எம்.எல்.ஏ. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.. 

“தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பெண் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டுமென திடீரென போர்க்கொடி தூக்க காரணம் என்ன?”

“தமிழ்நாடு காங்கிரஸுக்கு 60 ஆண்டுகாலமாகப் பெண் தலைவரே கிடையாது.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பெண்கள் வாக்கு அதிகளவில் அவருக்கே சென்றது. அவருடைய மறைவுக்குப் பின் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு அந்த வாக்குகள் ஓரளவுக்கு வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் பெண் தலைவர்கள் இல்லாததால் வாக்குகள் முழுமையாக வரவில்லை. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தற்போதைக்கு பெண் ஒருவர் தலைவராக வருவதற்குச்  சாத்தியமில்லை. எனவே, தேசிய கட்சிகள் மாநிலத்தில் பெண் தலைவரைக் கொண்டுவரலாம்.”

சத்தியமூர்த்தி பவன்

“உங்களுக்குத் தலைவர் பதவி வேண்டும் என்பதைத் தான் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்களா?”

“தலைவர் பதவி கேட்பதில் என்ன தவறிருக்கிறது. அதுமட்டுமில்லை காங்கிரஸில் நான் சீனியர். கடந்த ஆண்டு சட்டமன்ற கட்சித் தலைவர் வாக்கெடுப்பு நடந்தபோது பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எனக்கு வாக்களித்தார்கள். ஆனாலும், சட்டமன்ற கட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவர் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கட்சி முடிவு எடுத்ததால் அதற்கு நான் ஒத்துழைத்தேன். அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கட்சி தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில் எனக்கே வாய்ப்பு கொடுக்க  வேண்டுமெனக் காங்கிரஸ் தலைமையிடம் கேட்டிருக்கிறேன்.” 

“கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தலைவர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?”

“எம்.பி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. தலைவர் பதவி கேட்பவர்கள் பெரும்பாலும் எம்.பிக்களாக  இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்தால் மாநிலம் முழுக்க பிரசாரம் செய்ய முடியாமல் போகும். எம்.பி தேர்தலிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும்.”

விஜயதரணி

“ஒருவேளை ஜோதிமணி தேர்தலில் நிற்காமல் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால்..?”

“எம்.பி சீட் வேண்டாம் என்று ஜோதிமணி இதுவரை சொல்லவில்லை. எம்.பியாக இருப்பவர்கள் மீண்டும் எம்.பி தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தலைவர் பதவியையும் வாங்கிவிட்டு அப்புறம் எம்.பி தேர்தலிலும் நின்றால் அது ஏமாற்று வேலையாகிவிடும். அதனாலேயே எம்.பிக்களுக்கு தலைவர் பொறுப்பு வேண்டாம் என்கிறேன்.” 

“எம்.பிக்களுக்கு தலைவர் பதவி கொடுக்கக்கூடாது என்கிறீர்களே… 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் நீங்கள் ஒதுங்கத் தயாரா?”

“காங்கிரஸ் தலைவர் பதவி 3 வருடம் தான்.  அதற்கு மேல் நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது. இப்போது பொறுப்பு கொடுத்தால், 2026 தேர்தலுக்கு முன்பாகவே எனது பதவிக் காலம் முடிந்து விடும். ஆனால், எம்.பி தேர்தல் அடுத்த ஆண்டே வருகிறதே?”

விஜயதரணி

“ஒருவேளை நீங்கள் தலைவரானால் தமிழ்நாடு காங்கிரஸில் முதலில் எதை மாற்றுவீர்கள்?”

“முதலில் நான் கோஷ்டி பூசலை தான் சரிசெய்வேன். கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சியை உயர்த்த வேண்டும். மேலும், பதவிகளில் பெரிய மாற்றம் ஒன்றும் தேவைப்படாது. எதுவாக இருந்தாலும் மூத்த தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து தான் முடிவுகளை எடுப்பேன்.”

விஜயதரணி

“கே.எஸ்.அழகிரி – ரூபி மனோகரன் இடையிலான கோஷ்டி பூசலில் உங்கள் ஆதரவு யாருக்கு?”

“நான் யார் பக்கமும் இல்லை. என்னை பொருத்தவரை அந்த சம்பவமே வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. இதை கடந்து செல்ல வேண்டும். மீண்டும் நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இடத்தை பிடிக்க ஏன் இவ்வளவு போட்டி?”

“ஒருவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் அடுத்தடுத்த ஆள்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். கே.எஸ்.அழகிரி பதவி காலம் முடிந்தும் நீடிக்கிறார். அப்படியிருக்கும் போது எங்களை போன்றவர்கள் புதிய வாய்ப்புகளை எதிர்பார்ப்பது நியாயம் தானே?. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்கும் போது அவர்களுக்கு சத்தியமூர்த்தி பவனில் ஒரு போட்டோ மாட்டுவார்கள். முன்னாள் தலைவர் என்ற பட்டம் கிடைக்கும். அவ்வளவு தானே தவிர இதில் வேறொன்றுமில்லை.”

விஜயதரணி

“கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் வளர்ச்சி அடைந்ததா… இல்லையா?”

“அவருடைய காலத்தில் தான் தமிழ்நாடு காங்கிரஸுக்கு 18 எம்.எல்.ஏக்கள், 8 எம்.பிக்கள் கிடைத்தார்கள். அதேநேரம், சண்டைகள், கோஷ்டி பூசல்களை அவரால் தவிர்க்க முடியவில்லை.”

“புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி வரும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே… அங்கேயும் காங்கிரஸ்  வலுவிழந்துவிட்டதா?”

“இது புதுச்சேரியில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடக்கும் விஷயங்கள். எனவே, கட்சி மேலிடம் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களை அழைத்துப்பேசி இதுபோன்ற  பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்”

கே.எஸ்.அழகிரி, விஜயதரணி

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறதே?”

“குஜராத்தை பொறுத்தவரை கடந்த முறை பா.ஜ.க-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்தது. ஆனால், இந்தமுறை ஆம் ஆத்மி உள்ளே வந்ததால் மும்முனை போட்டியாக மாறிவிட்டது. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெறவில்லையே  தவிர காங்கிரஸின் தோல்விக்கு அவர்களே முக்கிய காரணம்.”

“காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு ஆம் ஆத்மி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ?”

“ஆம்… பஞ்சாப் சின்ன மாநிலம் என்பதால் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துவிட்டார்கள். பா.ஜ.க எங்களுக்கு எதிரான கட்சியாக இருந்தாலும் எங்களின் மதச்சார்பற்ற வாக்குகளை பிரிப்பதால் ஆம் ஆத்மி தான் எங்களின் முதல் எதிரி. ஆம் ஆத்மியை  பொறுத்தவரை வாக்குகளை பிரித்து ஆட்சியை பிடிக்கிறது. இல்லையென்றால் காங்கிரஸ் ஆட்சியை வரவிடாமல் செய்துவிடுகிறது.”

பாரத் ஜோடோ யாத்திரை

“அப்படியென்றால் குஜராத் தேர்தலில் ராகுல் காந்தியின் பிரசாரமும், நடைபயணமும் எடுபடவில்லையா?”

“ராகுலின் நடைபயணம் இந்தியா முழுவதும் மக்களின் நேரடி பார்வைக்கு சென்றது. அதேநேரம் குஜராத்தில் நடந்தது ஓட்டுபிரிப்பு. அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இமாச்சலில் ராகுலின் நடைபயணம், பிரியங்கா காந்தியின் பிரசாரம் எடுபட்டதாலேயே வெற்றி பெற்றிருக்கிறோம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.