ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல்காரர் கன்னையா லாலை (48), கடந்த ஜூன் 28-ம் தேதி பட்டப்பகலில் 2 முஸ்லிம் இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்தனர்.
இருவரும் கைது செய்யப்படுவ தற்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவில், முஸ்லிம்களின் இறைத் தூதர் முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததால் கன்னையா லால் கொல்லப்பட்டதாக கூறினர்.
இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கொலையாளிகள் கவுஸ் முகம்மது, முகம்மது ரியாஸ் தவிர கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மோசின் கான், ஆசிப் உசைன், முகம்மது மோசின், வாசிம் அலி, பர்கத் முகம்மது ஷேக், முகம்மது ஜாவேத், முஸ்லிம் கான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 9 பேர் மற்றும் தலைமறைவாக இருக்கும் 2 பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 11 பேர் மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
என்ஐஏ தனது குற்றப்பத்திரிகையில், “நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பரப்பப்பட்ட ஆடியோ, வீடியோ மற்றும் செய்திகளால் தூண்டப்பட்ட தீவிரவாத செயல் இது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தீவிரவாத கும்பலாக செயல்பட்டுள்ளனர். மத அடிப்படையில் பகைமையை வளர்க்கும் நோக்கத்துடன் தலை துண்டிக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பினர். கொலையாளிகள் இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த சல்மான், அபு இப்ராகிம் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளனர்” என்று கூறியுள்ளது.