புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியை அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது.
சீனாவில் கரோனா பரவல் அதிகரித்ததவுடனேயே மத்திய அரசு விதித்த முதல் கெடுபிடி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு தான் கெடுபிடி விதித்தது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற முடியாவிட்டால் உடனடியாக யாத்திரையை நிறுத்துமாறு கூறியது. இதன் நிமித்தமாக காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக நேற்று ஹரியாணாவில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜகவையும் அதன் சித்தாந்த தலைமையகமுமான ஆர்எஸ்எஸ்யையும் வெகுவாக சாடினார். ராகுல் காந்தி பேசுகையில், “அவர்கள் வெறுப்பை விதைக்கிறார்கள். நாங்கள் அன்பை பரப்புகிறோம். இந்தியர்கள் அனைவரையும் ஆரத்தழுவுகிறோம். இந்த ஒற்றுமை யாத்திரையில் இந்துஸ்தானும் இருக்கிறது, அன்பும் இருக்கிறது. இந்த யாத்திரை சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரர் என பாகுபாடு பார்ப்பதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கைகள் வெறுப்பையும் அச்சத்தையும் மட்டுமே கடத்துகின்றன. அவர்களுக்கு எல்லோரையும் பயப்படச் செய்ய வேண்டும். அந்த பயத்தை வெறுப்பாக மாற்ற வேண்டும். நாங்கள் அஞ்சாதீர்கள் எனச் சொல்லி அன்பை பரப்பி அரவணைக்கிறோம்” என்று பேசியிருந்தார்.
எங்களுக்கு பயமா? முன்னதாக காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு பாஜகவுக்கு அச்சம் என்று அக்கட்சி விமர்சித்தது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், “காங்கிரஸ் கட்சியைக் கண்டு பாஜகவுக்கு பயம் ஏற்படுவதற்கான அவசியமில்லை. காரணம் காங்கிரஸ் கட்சி இப்போதைய அரசியல் சூழலுக்கு பொருத்தமற்றதாகிவிட்டது. அவர்கள் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை அவர்களது இருப்பை உறுதி செய்ய மட்டுமே நடக்கிறது. இந்தியா ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. உடைந்து போய்விடவில்லை. எல்லா பக்கங்களில் இருந்தும் இந்தியா இணைந்தே இருக்கிறது.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா வளர்கிறது என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்று திசை திருப்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.