கோர விபத்து – சபரிமலைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம் வழியாக கம்பம் மெட்டு  மலைச்சாலையில் சபரிமலை செல்கின்றனர். சபரிமலை சென்றவர்கள் குமுளி மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு சபரிமலை சென்று திரும்பிய தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் குமுளி மலைச்சாலையில் பாலத்தை கடக்கும்போது, நிலை தடுமாறி சும்மா 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புபணியில் விரைந்து ஈடுபட்டனர். 

அப்போது, சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை பலத்த காயத்துடன் முதலாவதாக மீட்கப்பட்டு அவனை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வாகனத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 7 நபர்கள் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் பலத்த காயமடைந்த இருவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த ஏழு ஐயப்பன் சுவாமிகளையும், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தமிழக, கேரளா பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.