கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 8000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் சந்தோம், பெசன்ட்நகர், சின்னமலை தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் வகையில், டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயேசுநாதா் பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (டிசம்பா் 24-ஆம் தேதி) இரவு தொடங்கி டிசம்பா் 25-ஆம் தேதி அதிகாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை (டிச. 24) இரவு 11 மணி அளவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறவுள்ளன.
இதையொட்டி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தேவாலயங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.