ஜனவரி 31 கடைசி நாள்… சொத்துவரி உடன் ரேஷன், பான், ஜி.எஸ்.டி இணைப்பு… வந்தது புதிய உத்தரவு!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகராட்சி நிர்வாக மென்பொருளில் உள்ள வரி விதிப்புதாரர்களின் விவரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன் குடும்ப அட்டையினை இணைக்க வேண்டும்.

சொத்துவரி விதிப்பு எண் இணைப்பு

வணிக நிறுவனங்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்கள் குறித்த விபரங்களை இணைப்பது அவசியம். மேலும், மாநகராட்சியின் வரியில்லா இனங்களின் குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்ணை இணைக்க நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி உத்தரவு

எனவே, கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது
சொத்து வரி
விதிப்பு புத்தக நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்கள் உடன் வர வேண்டும். இதேபோல் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி புத்தக நகல் அல்லது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி ஆவணங்களுடன் வருவது அவசியம்.

ஆவண நகல்களுடன் வரவும்

மேலும் மாநகராட்சி வரியில்லா இனங்களுக்கான வருடாந்திர குத்தகை இன குத்தகைதாரர்கள் மற்றும் மாதாந்திர கடை உரிமைதாரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட குத்தகை எண்களின் விவரத்துடன் தங்களது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்களுக்கான ஆவண நகல்களுடன் வர வேண்டும். வார வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை

கடைசி தேதி

சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை நேரில் அணுகி இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் வரும் 31.01.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஐஏஎஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

வரி உயர்வு எவ்வளவு?

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதுவே 1800 சதுர அடிக்கு மேல் குடியிருப்பு கட்டடங்கள் இருந்தால் அவற்றுக்கு 100 சதவீத சொத்து வரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.