அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி:
‘பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., இல்லை; எங்களுக்குத் தான் சொந்தம்’ என, பன்னீர்செல்வம் தரப்பு சொந்தம் கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிக்கு உட்பட்டதா?
‘ஒரு முறை மட்டுமே முதல்வராக இருந்த பழனிசாமிக்கு இருக்கிற உரிமை, மூன்று முறை முதல்வராக இருந்த தனக்கு இல்லையா’ என, பன்னீர்செல்வம் நினைப்பது தவறா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
சென்னை, பரந்துார் விமான நிலையத்திற்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர் பாக, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை, தி.மு.க., அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை. வளர்ச்சி திட்டம் தேவை தான் என்றாலும், நமக்கு சோறு போடும் விவசாயத்தை அழித்து வரக்கூடியதாக இருக்கக் கூடாது.
வாஸ்தவம் தான்… அதேநேரத்தில், விமான நிலையமும் தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் இல்லையே… பொதுமக்கள் பயன்படுத்த தானே கட்டுறாங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நரேந்திரன் பேட்டி:
வேலுார் மாநகராட்சியில் நடக்கும் ஊழல் ஆதாரங்களை திரட்டி வருகிறோம்; அதை, மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். அது, வெளியாகும் பட்சத்தில், தமிழகத்திலேயே ஊழல் மிகுந்த மாநகராட்சியாக வேலுார் இருக்கும். பா.ஜ.,வினர் உள்ள வார்டு களில், வேண்டுமென்றே மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை தோண்டி போடுகிறது. இந்நிலை நீடித்தால், மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ., – எம்.பி.,க்களிடம் இருந்து நிதி பெற்று, வார்டுகளில் பணிகளை செய்வோம்.
அதையும், ‘திராவிட மாடல்’ அரசு உருப்படியாக செய்ய விடுமா என்ன? ஆயிரத்தெட்டு சட்ட, திட்டங்களை காரணம் காட்டி, ‘கட்டை’ போடுவாங்களே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளி களை மேம்படுத்த, என்னென்ன தேவை, எவ்வளவு நிதி தேவை என்ற பள்ளி வாரியான புள்ளி விபரங்கள், பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. மொத்தம், 39 மாணவர்கள் மட்டுமே உள்ள கடலுார் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சொக்கன் கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, 7.61 கோடி ரூபாய் தேவை என குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்தப் பள்ளியில் அனைத்து அறைகளும் மிகச் சிறப்பாக உள்ளன. தேவையென குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களின் விலையும், மிக அதிகமாக உள்ளன.
இந்த நிதிக்கு புதுசா பள்ளிக்கூடமே கட்டிடலாமே… மக்கள் வரிப்பணம் எப்படி கொள்ளை போகுது என்பது நல்லாவே தெரியுது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்