மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறது. இதில் கரும்பு சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசுதொகுப்புடன் அரசு கரும்பு வழங்கும் என எதிர்பார்த்து தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தனர். ஆனால், அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. அதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு கொள்முதல் செய்யும் என்கிற எதிர்பார்ப்பில் அறுவடைக்குத் தயாரான கரும்பை வியாபாரிகளுக்கு விற்காமல் இருந்தனர். தற்போது அரசு கொள்முதல் செய்யாததால் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைய நேரிடும்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் என்.பழனிசாமி கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக மதுரை மாவட்டத்தில் மேலூர்,வெள்ளலூர், தனியாமங்கலம், கீழையூர், நாவினிப்பட்டி, சருகுவளையப்பட்டி, குருங்காப்பட்டி, போட்டநத்தம்பட்டி, கொட்டகுடி, புதுசுக்கான்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். எட்டிமங்கலத்தில் மட்டும்200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஓர் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கு ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளனர். 300 கரும்பு ஒரு மாட்டுவண்டி லோடு என்பார்கள். ஏக்கருக்கு 12 மாட்டுவண்டி லோடு கிடைக்கும். தமிழக அரசு கொள்முதல் செய்து மீதமுள்ள கரும்பை வெளி மார்கெட்டில் வியாபாரிகள் விற்றிருந்தால் ரூ.1 லட்சம் லாபம் பெற்றிருப்பார்கள்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுதொகுப்பில் கரும்பு இடம் பெற்றாலும் மதுரை மாவட்டத்தில் பெரியஅளவு கொள்முதல் செய்யவில்லை. சின்னமன்னூர், கம்பம், புதுப்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் கொள்முதல் செய்தனர். அதனால், மதுரை மாவட்ட விவசாயிகள் வியாபாரிகளிடம் குறைந்தவிலைக்கு விற்று நஷ்டம் அடைந்தனர்.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்போம் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கரும்பு 15 அடி வரை வளர்ந்துள்ளது. இந்த கரும்பு வெளிமார்கெட்டில் ரூ.60 வரை விற்பனையாகும். தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்யும் என்பதால் வியாபாரிகள் யாரும் வாங்க வரவில்லை.
சாகுபடி செய்த கரும்பை அடுத்த 15 நாட்களில் விற்றால் மட்டுமே உண்டு. இந்த கரும்பை வெல்லத்துக்கு ஆட்ட முடியாது. சீனி வராது. தின்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறும் வகையில் தனது முடிவை அரசு மறுபரீசலனை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கூறினார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் எம்.ராமலிங்கம் கூறும்போது, கடந்த ஆண்டு அரசு 4 லட்சத்து 5 ஆயிரம் கரும்பு கொள்முதல் செய்தது. அதை எதிர்பார்த்து இந்த ஆண்டு நிறைய சாகுபடி செய்தனர். ஆனால் கரும்பு வழங்காததால் விலை வீழ்ச்சியடைந்து பெரும் நஷ்டமடைவார்கள். அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
சின்னமன்னூர் கரும்பு விவசாயி அழகுராஜா கூறியதாவது: முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று கொள்முதலை நிறுத்தியது அதிர்ச்சியாக உள்ளது. அதிகமாக விளைவித்த கரும்பை எப்படி விற்பது என்று தெரியவில்லை. வியாபாரிகளை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளதால் உரிய விலை கிடைக்க வாய்ப்பில்லை. பொங்கல் பண்டிகை வழிபாட்டுக்கு கரும்பு முக்கியம். இது இல்லாமல் பண்டிகை முழுமை அடையாது. கரும்பு கொள்முதலுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.