சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரும்பும் சேர்த்து வழங்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தைப் பொங்கல் என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தாங்கள் பயிரிட்ட செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் பல இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. பொங்கலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். எனவே, ஒரு கரும்பு ரூ.35 என்ற விலையில் தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சிக்குவந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை வழங்குவோம் என்னும் வாக்குறுதியை மறந்த திமுக அரசு, பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்குமுன் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததையும் மறந்துவிட்டார்கள். மேலும், ஒரு கிலோ அரிசி ரூ.21, சர்க்கரை ரூ.31 வீதம் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, இந்த பொருட்களின் விலை ரூ.76 என கணக்கு காட்டியுள்ளதையும் மக்களுக்கு விளக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லமும் சேர்த்து வழங்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்துக்குரியது. மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசில் கடந்த ஆண்டுகளில் கரும்பு இடம்பெற்று வந்தது. இதை தற்போது வழங்காமல் இருப்பது, கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழக அரசு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன்: பொங்கல் பரிசுத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு, விவசாயிகள் சார்பாக நன்றி. அதேநேரம், இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதாக அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உற்பத்தி செய்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்கினால், அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள், விவசாயிகள் பயனடைவர். எனவே, பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து முதல்வர் அறிவிக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம்: அரசை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், கூடுதலான பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாமல் உள்ளதால் கடுமையான விலைவீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாநில அரசு பரிசீலனை செய்து, பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் இணைத்து வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.