மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான தேதி நீட்டிப்பு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதற்காக மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறும் 3 அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றார். முதலில் நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றார்.
அமைச்சரிடம் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர். வருகிற 31-ந் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்து உள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார். எனவே அந்த தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
newstm.in