Meera Mithun Update: சென்னை: மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த 50 ஆயிரம் ருபாயை பெற்று ஏமாற்றியதாக, நடிகை மீரா மிதுனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2018 ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டபோது, அதற்கான அரங்கில் தனியார் நிறுவனதை பிரபலப்படுத்த 50 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். நடிகை மீரா மிதுன் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், அந்த வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தற்போது நடிகை மீரா மிதுன், வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக உள்ளதால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.